Main Page | Home | Eelamclips | Gallery | Contact us | Forum | Live Radio

Kaanolikal

EHL - theyakie thilepan P1

EHL - theyakie thilepan P2

EHL - Theeyakath thee thilepan

EHL - padum paravaikal parunkal

 

தியாக தீபம் திலீபனின் நான்காம் நாள் இன்று

தியாகதீபத்தின் 22ம் ஆண்டின் நாலாம் நாள் இன்று. 1987 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் சன்னிதியில் மிகவும் இறுக்கமான வைராக்கியத்துடன் தனது ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும் இல்லையேல் சாவு என்ற யாராலும் அசைக்கமுடியாத உண்ணா நோன்பினை மேற்கொண்டிருக்கும் 4 ம் நாளான இன்று இந்திய அதிகாரிகள் வரப்போவதாக செய்திகள் வந்தன.

இதனை கேட்ட அனைவரும் மகிழ்ச்சி பொங்கியது அதாவது வந்து தமது திலீபனின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் தமது திலீபன் காப்பாற்றப்படுவான் என்பதே அந்த  மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை வருவதும் போவதும் தான் எஞ்சியதே தவிர தமிழர்கள் காப்பாற்றப்படவில்லை இது வரலாறு. ஆம் என்ன நடந்தது அந்த 4 ம் நாளில்?

தியாக தீபம் திலீபன்

4ம் நாள்


1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 18ம் திகதி இது திலீபனுடன் நான்காம் நாள். அதிகாலையில் ஒர் அதிசயம் நிகழ்ந்திருந்தது ஆம் இன்று காலை திலீபன் 5.00 மணிக்கே படுக்கையைவிட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகவும் கூறினார். அவர் இருக்கும் நிலையில் படுக்கையைவிட்டு எழுந்து செல்வது முடியாது என்பதால் படுக்கையிலேயே சலப்போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும், சலம் போவதற்கு கஸ்ரமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும் ஆனால் அதைப்பற்றி பேசினால் எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நாலைந்து நாட்களாக படுக்கையில் கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப் பை பாதிக்கப்பட்டு இருக்கலாம் இதை  அவரிடம் எப்படி கூறுவது. தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்க போவதாக கூறினார். அவரின் விருப்பத்துடன் அவரை கைத்தாங்கலாக பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். 15 நிமிடங்களாக வயிற்றை பொத்தி பொத்தி மிகுந்த கஸ்ரப்பட்டார். அதன் பின் ஆச்சரியப்படும் அளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத்தந்தது.

5 நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாகும் அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இது பற்றி மறக்காமல் கேட்டேன். அவர் எந்த பதிலுமே கூறாமல் மெளனமாக சிரிப்பை உதிர்த்து விட்டுச் சென்றார். அன்று மத்தியானம் எமது இதயத்திற்கு மகிழ்ச்சியைத்தரும் ஒரு இனிய செய்தி செவிகளில் விழுந்த போது ஒரு இனந்தெரியாத நிம்மதி வந்தது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து முக்கிய நபர் ஒருவர் வரப்போகிறாராம் அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப்பற்றி பேசப்போகிறாராம்.

என் பிரார்த்தனை வீண் போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகிறது இந்தியத்தூதரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள். அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரை கண்டாவது இரங்க மாட்டார்களா? திலீபனை எண்ணி துடிதுடித்துக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் மனங்களுக்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளித்தது. திலீபா நீ ஆரம்பித்து வைத்த அகிம்சை போர் எங்கள் ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. உன் அகிம்சை போரினால் அப்படியொரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எமக்கு மட்டும் ஆயதங்களைத்தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ளவேண்டுமென ஆசையா என்ன முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை செல்வா தலைமையில் முயன்று முடியாத நிலையில் எமது தமி்ழ்ச்சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறுவழியின்றி ஆயுதத்தை ஏந்தினோம். நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எம் எதிரி அகிம்சையை பற்றி ஒன்றுமே தெரியாது , அவனுக்கு அது புரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும் , துப்பாக்கியும்தான் இன்று காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலிலிருந்து திலீபனின் பேரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. தளபதி கிட்டு அண்ணனின் தாய் திலீபனை வாரியணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சைத்தொட்டது.

துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்த தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொணடிருக்கின்றன. ஒரு கால் போனால் என்ன இன்னும் ஒரு கால் இருக்கு இரண்டு கை இருக்கு அவன் கடைசி வரைக்கும் போராடுவான். போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருந்ததைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வீரத்தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது. உதவி இந்தியத்தூதுவர் திரு.கென் அவர்கள் விமானம் மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்.  அவருடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும் மற்றவர்களும் போய் இருக்கின்றனர். என்ற செய்தியை சிறி வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தேன். திலீபனுக்கும் அதை தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்று தெம்பாக இருந்தார். பேச்சு வார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவுகள் கிடைக்குமானால் உண்ணாவிரதத்தினை நிறுத்தி விட்டு திலீபனை யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கவேண்டும். அங்கே அவசர சிகிச்சை பிரிவு அவருக்கு வேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத்தொடங்கினால் இரண்டு மூன்று நாட்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத்தொடங்கிவிடுவார். இப்படி எனக்குள்ளேயே கணக்கு போட்டுக்கொண்டேன். இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் தம்மை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுத காட்சி என் நெஞ்சைத்தொட்டது. தளபதிகள் சூசை, புலேந்திரன், ஜொனி, மற்றும் பிரபா, ரகு அப்பா ஆகியோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி வருடி தடவி பேசிவிட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார். கிட்டண்ணையை பார்க்க வேணும் போல இருக்கு அவர் மெதுவாக கூறும் போது அவர் முகத்தில் ஏக்கம் படர்ந்திருந்தது. ஒரு கணம் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கிட்டண்ணா,குட்டிசிறி,ஜயர் இவர்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்கின்றனர். திலீபனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். கிட்டு அண்ணன் இந்தியாவில் தெரியும் ஆனால் இந்த நிலையில் அவர் கி்ட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயந்தான்.

இரவு வெகுநேரம் வரை பேச்சு வார்த்தையின் முடிவு வரும் வரும் என பார்த்துக்கொண்டிருந்தோம் ஆனால் அது வரவேயில்லை. இன்று மாலை சிறிலங்கா நவசமசமாஜக்கட்சி தலைவர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அவரின் கட்சியைக் சேர்ந்தவர்கள் வந்து திலீபனை பார்த்து விட்டு சென்றனர். இரவு வெகு நேரம் வரை எனக்கு தூக்கம் வரவில்லை.ஆனால் திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார். அவருடைய இரத்த அழுத்தம் சற்று குறைந்திருந்தது. நாடித்துடிப்பு 120 ஆக உயர்ந்திருந்தது.
ehs; 1 ehs; 2 ehs; 3 ehs; 4
ehs; 5 ehs; 6 ehs; 7 ehs; 8
ehs; 9 ehs; 10 ehs; 11 ehs; 12
       
 

copyright 2012 @ EelamHomeLand.Com | Web Design by Tamil Elilan | admin@eelamhomeland.com