Post Reply 
 
Thread Rating:
  • 0 Votes - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுதுமலைப் பிரகடனம், திலீபனின் தியாகச்சாவு
12-06-2011, 07:40 AM
Post: #1
சுதுமலைப் பிரகடனம், திலீபனின் தியாகச்சாவு
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.

தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.

தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்தி, தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.

திலீபனின் தியாகச்சாவு

[Image: thilepan.jpg]

இந்நிலையில் விடுதலைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் இந்தியாவின் ‘இரட்சகர்” என்ற போலி வேடத்தை மக்களுக்கு புரிய வைக்கவும் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் தியாகி திலீபன், இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த 5 விடயங்களை நிறைவேற்றும்படி கூறி நீராகாரம் இன்றி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15ம் நாள் ஆரம்பித்தார்.

இந்தியாவின் துரோகப் போக்கினால் ஐப்பசி 26ல் லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரச்சாவடைந்தார்.

லெப்டினன் கேணல் திலீபனின் வீரமரணம் குறித்து தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘வடக்கு கிழக்கு அடங்கலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும். மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வெள்றெடுக்கலாம். திலீபனின் ஈடுஇணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்’ என்றார்.

12 போராளிகள் வீரமரணம்

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். ‘போர் நிறுத்த நேரத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது’ என தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் போராளிகளை உடன் விடுவிக்குமாறு இந்திய, சிறீலங்கா அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்திய அரசின் துரோகத்தனத்தால் 17 போராளிகளும் சயினைட் உட்கொண்டனர். அவர்களில் 12 போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர். இதுபற்றி மக்களுக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் ‘எமது போராளிகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனாவிடம் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்த அநியாயமான சாவுகள் நிகழ்ந்தே இருக்காது.

இந்த வகையில் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது. எமக்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் பொறுப்பபும் தார்மீகக் கடமைப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்றால் இந்தியப் படைகள் இங்கிருப்பதன் அர்த்தம் என்ன?

சனாதிபதி nஐயவர்த்தனாவுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் சமூக விரோத இயக்ககங்களுக்கும் பாதுகாப்பளித்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய சமாதானப் படைகளின் நோக்கமா?

எமது தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதில் அவர்களைச் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கத் துணைபோனது இந்திய சமாதானப் படையினர் எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றம். இந்த சூழ்நிலையில்தான் நாம் இனி யுத்த நிறுத்தத்தைப் பேணுவதில்லை என முடிவெடுத்தோம்’ என்றார்.
Visit this user's website Find all posts by this user
Quote this message in a reply
Post Reply 


Forum Jump:


User(s) browsing this thread: 1 Guest(s)