 |
தமிழீழத் தேசியக்கொடி
பாகம் 2
கொடிவணக்க ஒழுங்குமுறை
- தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பத்தின் உயரம் 22அடிக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
- தேசியக்கொடியின் நீளம் 4 அடியாகவும் உயரம் 3 அடியாகவும் இருத்தல் வேண்டும்
- தேசியக்கொடியுடன் வேறு கொடிகளும் ஏற்றப்படின் அக்கொடிகள் தேசியக்கொடியைவிடப் பெரிதாக இருக்கக்கூடாது.
- தேசியக்கொடியேற்றப்பட்ட கொடிக்கம்பத்தைவிட ஏனைய கொடிக்கம்பங்கள் 2 அடி உயரம் குறைந்ததாக இருக்க வேண்டும்.
- தேசியக்கொடியுடன் பிறநாடுகளின் தேசியக்கொடிகள் ஏற்றப்படுவதாயின் ஒரே அளவு உயரமுள்ள கொடிக்கம்பத்தில் ஒரே அளவான கொடிகளை ஏற்றலாம்.ஆனால் எமது தேசியக்கொடிக்கு இடப்புறமாகவே ஏனையநாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படவேண்டும்.
- எமது தேசியகொடியுடன் பிறநாட்டுத் தேசியக்கொடிகளை ஏற்றுவதாயின் எமது தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்பே ஏனைய தேசியக்கொடிகள் ஏற்றப்படவேண்டும்.
- கொடிகள் இறக்கப்படும்போது ஏனைய கொடிகள் இறக்கப்படவேண்டும்.பின்பு இறுதியாகவே எமது தேசியக்கொடி இறக்கப்பட வேண்டும்.ஏனைய கொடிகள் பறந்துகொண்டிருக்போது எமது தேசியக்கொடியை ஒருபோதும் இறக்கக்கூடாது.
- ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச் செல்வதாயின் கொடியின் உயரத்தின் 4 பங்கு உயரமான கம்பத்தில் கட்டி நெஞ்சுக்கு நேராகவோ அன்றி வலத்தோளிலோ ஏந்திச் செல்ல வேண்டும்.தேசியக்கொடியை ஏந்திச்செல்பவருக்கு முன்பாக வேறு எந்தக் கொடியை ஏந்துபவரும் முந்திச் செல்லக்கூடாது.
- கூட்ட மேடைகளில் பேச்சாளரின் தலைக்கு மேலாக பின் புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம்.
- தேசியக்கொடியில் எதுவும் எழுதப்பட்டிருக்கக் கூடாது.
- தேசியக்கொடி கிழிந்தோ, சிதைந்தோ போனால் அதைப் பழந்துணியாகப் பயன்படுத்தவோ குப்பைத்தொட்டியில் வீசவோகூடாது.
- தேசியக்கொடியை வணிக விளம்பரத்துக்கோ,விரிப்பாகவோ அன்றி வேறெந்தத் தேவைகளுக்காகவோ பயன்படு;த்தக்கூடாது.
- குறிப்பிட்ட சில உயர் அரச பணியகக் கட்டிடங்களில் மட்டும் தேசியக்கொடி கொடிக்கம்பத்தில் ஏற்றப்படலாம்.
- கட்டிடங்களில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்பாக இறக்கப்படவேண்டும்.
- ஆட்சிப்பொறுப்பிலுள்ளோர்,தலைவர்கள்,உயர் அலுவலர்கள் வீடுகளிலும் எந்நாளும் பகலில் தேசியக்கொடி பறக்க விடப்படலாம்.
- வெளிநாடுகளிலுள்ள எமது கிளைகளிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடி பறக்க விடப்படலாம்.
- குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் பொதுமக்கள் வீடுகளில் கட்டிடங்களில்,தேசியக்கொடி பறக்கவிடப்படலாம்.இவை முறையாகக் கம்பங்களில் மட்டுமே ஏற்றப்படவேண்டும்.
- தெருவுக்குக் குறுக்காகவோ பக்கமாகவோ கயிறுகளில் தேசியக்கொடி தொங்கவிடப்படக்கூடாது.
- தேசியக்கொடியைத் தலைகீழாக பறக்கவிடக்கூடாது.
- தேசியக்கொடியிலுள்ள புலி,கொடிக்கம்பத்தைப் பார்த்தவாறு பறக்கவிடக்கூடாது.புலியின் பார்வை கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்புறமாகக் கொடி பறக்கும் பக்கமாக இருக்கும் வகையில் கொடி பறக்கவிடப்படவேண்டும்.
- தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடி ஏற்றக்கூடாது.
- தேசியக்கொடியை ஏற்றுபவர் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்து நிற்கும் மக்களுக்கும்,கொடிக்கம்பத்திற்கும் இடையில் நின்று கொடியை ஏற்றுதல் கூடாது.
தேசியக்கொடியை ஏற்றும்போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும்.
- தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோல், இறக்கப்படுவதும் ஒழுங்கு முறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்மையானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும்.
- தேசியக்கொடி இறக்கப்படும்பொழுது நிலத்தில் விழாது எட்டக்கூடிய உயரத்திலேயே வைத்து கைகளில் ஏந்தி எடுத்தல் வேண்டும். தேசியக்கொடி இறக்கும் நிகழ்வின்போது கையொலி எழுப்பக்கூடாது.அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.
- தேசியக்கொடி பொதுவாக மாலை 6.00 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்சிகள் மாலை 6.00 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை முறைப்படி இறக்கலாம்.
- கொடியேற்றித் தொடங்கப்படும் நிகழ்ச்சி நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும் வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம்.நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்க வேண்டும்.
தொகுப்பு- நேரியன்
துணைநூல்கள் - தமிழீழத் தேசியக் கொடி
சமூகக்கல்வியும் வரலாறும் ஆண்டு 6
|
 |
 |